தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என கமல் பேசியிருந்தார்.
இது சர்ச்சையான நிலையில், அவர் மீது வழக்கு பதியப்பட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்து – முஸ்லிம் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் தாம் எந்த கருத்தையும் பேசவில்லை என கமல் அதில் குறிப்பிட்டிருந்தார்.
மனு விசாரணைக்கு வந்தபோது, கமல் மீதான வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
அதனையேற்ற நீதிபதிகள், கமலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.