ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.230 கோடி அபராதம் – ஜிஎஸ்டியில் முறைகேடு

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காமல் ஆதாயம் பெற்ற காரணத்திற்காக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு  ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

ஜான்சன் & ஜான்சனின் குறிப்பிட்ட பொருட்களை பயன்படுத்துவதால், மிகப்பெரிய பின்விளைவுகள் இருப்பதாக சர்வதேச அளவில் இந்த நிறுவனத்தின் மீது பல நூறு வழக்குகள் உள்ளது.

ஏன் சில வழக்குகளில் இதற்காக கோடிக்கணக்கான ரூபாயும் அபராதமாக செலுத்தியுள்ளது இந்த நிறுவனம்.

அதிலும் அமெரிக்காவில் இந்த நிறுவனத்தின் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் சில தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் 28 சதவிகிதத்தில் இருந்து, 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்காமல், பொருட்களின் விலையை குறைக்காமல், ஆதாயம் பெற்றதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. 

அதன் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதன் பலனை நுகர்வோருக்கு கடத்தாமல் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இதேபோன்ற குற்றச்சாட்டுக்காக நெஸ்லே நிறுவனத்துக்கு ரூ.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே