பிகார் மாநிலத்தின் மதுபானி மாவட்ட நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபருக்கு ஜாமீன் வழங்கும் போது, அவரது கிராமத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பெண்களின் துணிகளை 6 மாதத்துக்கு இலவசமாக துவைத்து, இஸ்திரி போட்டுக் கொடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
லலன் குமார் என்ற குற்றவாளிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட ஜான்ஜார்பூர் நீதிமன்றம், நிபந்தனையாக, பாதிக்கப்பட்ட பெண் உள்பட கிராமத்தில் உள்ள அனைத்துப் பெண்களின் ஆடைகளையும் ஆறு மாதத்துக்கு இலவசமாக துவைத்துக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
20 வயதாகும் குற்றவாளி, துணி துவைக்கும் பணியைச் செய்து வந்த நிலையில், பலாத்காரத்துக்கு முயன்றதாக கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு 6 மாதத்துக்கு இலவசமாக துணி துவைத்துக் கொடுக்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, காவல்துறை தனது விசாரணையை முடித்துவிட்டது. வழக்கை முடிக்க இரு தரப்பும் பரஸ்பரம் ஒப்புக் கொள்வதற்கான விண்ணப்பங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், குற்றவாளி தனது தகுதிக்கேற்ப சமூகப் பணியாற்றுவதாக ஒப்புக் கொண்டதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவரது சேவையைப் பார்த்து 6 மாதங்களுக்குப் பின் கிராமத் தலைவர் மற்றும் அரசு அலுவலர் என இரண்டு பேர் அளிக்கும் சான்றிதழைப் பொருத்து தீர்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.