திமுக தொடர்ந்த பொய் வழக்கால் தான் உடல்நலம் குன்றி ஜெயலலிதா உயிரிழந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே நாங்குநேரி தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்ததாக திமுக எம்எல்ஏ உட்பட 5 பேரை பொதுமக்கள் சிறை பிடித்த நிலையில், தங்களுடைய கட்சி குறித்து பொய் தகவல் பரப்புவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.
விக்ரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தும்பூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார்.
அப்பொழுது நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் திமுக அரசுதான் எனக்கூறிய பழனிச்சாமி, திமுக தொடர்ந்த வழக்கால் தான் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததாக குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி காமராஜர் நகர் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்பொழுது ஒரு முதல்வர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடப்பாடிபழனிசாமி உதாரணம் என்று ஸ்டாலின் கூறினார்.
பதவி பறி போனால் எடப்பாடிபழனிசாமி மறுநாளே சிறை சென்று விடுவார் என்றும் ஸ்டாலின் பேசினார்.
நெல்லை மாவட்டம் நடுவக்குறிச்சி பகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார்.
நாங்குநேரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக துணைத் தலைவர் ஜிகே மணி களக்காட்டில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அதே போல் விக்கிரவாண்டி திமுக வேட்பாளரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்காக அத்தொகுதிக்குட்பட்ட அம்பலம் கிராமத்தில் திமுகவினர் பண விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது.
பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவண குமார் உள்ளிட்ட 5 பேர் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு எம்எல்ஏ சரவண குமார் உட்பட 5 பேரை சிறை பிடித்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்ததாக கூறி, தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அம்பலம் கிராமத்தில் கைப்பற்றப்பட்டது காங்கிரஸ் கட்சியின் பணம் கிடையாது என்றார்.
இதனிடையே நான்குநேரி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேட்சை வேட்பாளர் சங்கரசுப்பிரமணியன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் தேர்தல் நடைமுறை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.