பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநர் பன்வாரிலால் எதிர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் எழுத்துபூர்வமாக ஆளுநர் தமிழக அரசுக்கு எதையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

அமைச்சரவையின் பரிந்துரையின் மீது கடந்த ஓராண்டாக ஆளுநர் தரப்பிலிருந்து எந்த முடிவும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் 7 பேரை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கைகளை கடந்த ஆண்டு நிராகரித்த மத்திய உள்துறை அமைச்சகம், இவர்களை விடுவிப்பது அபாயகரமான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும், சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தது.

இந்த நிலைப்பாட்டையே பன்வாரிலால் புரோகித் தற்போது எடுத்து இருப்பதாகவும் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே