டெல்லி கவர்னருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!!

டில்லியில், யூனியன் பிரதேச அரசு என்பது, கவர்னரை மட்டுமே குறிக்கும் என்பதற்கான மசோதா, லோக்சபாவில் இன்று ( மார்ச்.22) நிறைவேற்றப்பட்டது.

நாட்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், முதல்வர் இருக்கும் நிலையில், அரசு என்பது, முதல்வர் தலைமையிலான அமைச்சரவையை குறிப்பதாக இருக்கும்.

இந்நிலையில், டில்லியில் அரசு என்பது, துணை நிலை கவர்னரை குறிப்பதாக இருக்கும் என்பதற்கான மசோதா, லோக்சபாவில் இன்று ( மார்ச்.22) நிறைவேற்றப்பட்டது.

இதற்கு, காங்., மற்றும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது அரசிலமைப்பிற்கு விரோதமானது என, கூறினர்.

இந்த மசோதா குறித்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியதாவது: டில்லி அரசின் நடவடிக்கைகளில், பல்வேறு சிக்கல்கள், குழப்பங்கள், தெளிவற்ற நடைமுறைகள் உள்ளன. 

இதுதொடர்பாக, நீதிமன்றங்களில் பல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.

இதனால்தான், இந்த மசோதாவை நிறைவேற்றும் அவசியம் ஏற்பட்டது. இதனை, அரசியல் ரீதியான மசோதா என, யாரும் நினைக்க வேண்டாம்.

டில்லி யூனியன் பிரதேசமாக இருப்பதால், அரசு ரீதியான நடவடிக்கைகளில் குழப்பங்களை முடிவுக்கு கொண்டுவரவே, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதன்படி, டில்லியில் அரசாங்கம் என்பது, துணை நிலை கவர்னரை மட்டுமே குறிக்கும். எனவே, நிர்வாக ரீதியாக எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன், இங்குள்ள அரசு, கவர்னரின் கருத்தை கேட்க வேண்டியது கட்டாயம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியிருக்கிறார்.

இதற்காக, ”பிரதமர் நரேந்திர மோடி அரசின் காலடியில் விழ ஆம் ஆத்மி கட்சி தயாராக இருந்தது,” என, சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே