திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் தனிச்சின்னம், ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஜவாஹிருல்லா அறிவித்தார்.

திமுக கூட்டணியில் இணைந்துள்ள மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் ஆனது.

அதில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் மற்றொரு தொகுதியில் ஜவாஹிருல்லா தனிச் சின்னத்திலும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மனித நேய மக்கள் கட்சிக்கு மணப்பாறை, பாபநாசம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இன்று கூட்டணி, தொகுதி உடன்பாட்டை இறுதிப்படுத்தியப்பின் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், திமுக தனித்து 173 தொகுதிகளிலும், கூட்டணிக்கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் 14 தொகுதிகள் என மொத்தம் 187 தொகுதிகளில் அண்ணா, கருணாநிதி கண்ட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று அறிவாலயம் வந்த மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே 2 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.

மனித நேய மக்கள் கட்சி 2 இடங்களில் போட்டியிடுகிறது. பாபநாசம் தொகுதியில் கட்சித்தலைவரான நான் போட்டியிடுகிறேன்.

திருச்சி மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் பொதுச் செயலாளர் அப்துல்சமது போட்டியிடுகிறார்.

நாட்டில் உள்ள சூழல், தமிழகத்தில் உள்ள சூழலை கருத்தில் கொண்டு மாநில உரிமைகளை நிலைநாட்ட ஒரு ஆட்சி மாற்றம் தேவை திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய ஒரு சூழல் உள்ளது.

எனவே இந்த நிலையை கருத்தில் கொண்டு இந்த முறை மட்டும் இரண்டு இடங்களிலும்; உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

இதன்மூலம் 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்கிற நிலையில் தற்போது 188 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே