முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்வு

முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

இதையொட்டி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளில் வாக்காளர்களாக இல்லாத அரசியல் கட்சி பிரமுகர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை மாலை 5 மணிக்கு மேல் அங்கிருந்து வெளியேற வேண்டுமென கூறி உள்ளது.

அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

30-ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் 28-ஆம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது என்றும் அப்போதும் இதே போன்று சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளில் வாக்காளர்களாக இல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று 27 மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே