கேடி என்கிற கருப்புதுரை திரைப்படத்துக்குக் கூடுதல் தேசிய விருதுகள் கிடைக்காததில் ஏமாற்றம்தான் என்றும், ரசிகர்களின் அன்புக்கு நன்றி என்றும் படத்தின் இயக்குநர் மதுமிதா பதிவிட்டுள்ளார்.
67-வது தேசிய திரைப்பட விருதுகள் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த குழந்தை நட்சத்திரமாக, கேடி (எ) கருப்புதுரை திரைப்படத்தில் நடித்த நாக விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த தமிழ்ப் படமாக அசுரனும், சிறந்த நடிகராக தனுஷ் மற்றும் மனோஜ் பாஜ்பாயும், சிறந்த உறுதுணை நடிகராக விஜய் சேதுபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விருது அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே வெற்றியாளர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் மதுமிதா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வெற்றி குறித்துப் பகிர்ந்துள்ளார்.
“கேடி (எ) கருப்புதுரையின் பயணம் எப்படிப்பட்டது! என்ன ஒரு இனிமையான முடிவு. அத்தனை அன்புக்கும், அங்கீகாரங்களுக்கும் நன்றி.
தேசிய விருதுகளில் இன்னும் கூடக் கூடுதலாக சில விருதுகளை வெல்லாததில் எங்கள் அணிக்கு ஏமாற்றம் இல்லை என்று சொன்னால் அது அப்பட்டமான பொய்யாக இருக்கும். ஏனென்றால் எல்லா அம்மாக்களின் பார்வையிலுமே அவர்களின் குழந்தைகள் தகுதியானவர்கள்தான்.
ஆனால், எங்களுக்குக் கிடைத்திருக்கும் தொடர் அன்பைப் பற்றி நாங்கள் நினைத்துப் பார்க்கிறோம். எங்கள் கை கூப்பி, சிரம் தாழ்த்தி ரசிகர்களாகிய உங்களை வணங்குகிறோம். நன்றி என்கிற வார்த்தை போதாது. ஆனால், இது அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான நேரம். இன்னும் புதிதாக உருவாக்கி, கற்று, தவறுகள் செய்வதற்கான நேரம்.
என்னைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு, நான் வேலை செய்து கொண்டே இருக்கும் ஒருத்தி என்பது தெரியும். இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லையென்றாலும் பல வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சந்தோஷமான, வித்தியாசமான, எதிர்பார்க்காத விஷயங்கள் காத்திருக்கின்றன.
எனவே என் இனிய மக்களே, மீண்டும் சந்திப்போம், நிறைய அன்புடன், மதுமிதா” என்று பகிர்ந்துள்ளார்.