ஜெயலலிதாவின் மேடைப் பேச்சு; சந்தேகத்தை உடைத்து நொறுக்கிய கங்கணா: மதன் கார்க்கி பாராட்டு

ஜெயலலிதாவின் மேடைப் பேச்சுகள் தொடர்பான காட்சிகள் இதில் அதிகம். அதில் எப்படி கங்கணா நடிக்கப் போகிறார் என்ற சந்தேகம் அனைவருக்குமே இருந்தது. ஆனால், அவை அனைத்தையும் கங்கணா உடைத்து நொறுக்கிவிட்டார் என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்தார்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தலைவி’. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

நேற்று (மார்ச் 22) ‘தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

சென்னையில் ‘தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் மதன் கார்க்கி பேசியதாவது:

”இந்தப் படத்துக்கான பயணம் மிகவும் அழகானதாக அமைந்தது. கதையைத் தயார் செய்துவிட்டு விஜயேந்திர பிரசாத் அலுவலகத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தோம். ஒரு நாள் முழுக்க திரைக்கதை குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு முன் விஜய் படங்களில் பாடல்கள் மட்டுமே எழுதியிருக்கிறேன். முதன்முறையாக இந்தப் படத்தில் வசனங்கள் எழுதி, கதை விவாதத்திலும் பங்கேற்றேன்.

இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் மேடைப் பேச்சுகள் தொடர்பான காட்சிகள் அதிகம். அதில் எப்படி கங்கணா நடிக்கப் போகிறார் என்ற சந்தேகம் அனைவருக்குமே இருந்தது. ஆனால், அவை அனைத்தையும் கங்கணா உடைத்து நொறுக்கிவிட்டார்.

அதே போல அரவிந்த்சாமியை முதல் முறையாக சந்திக்கச் சென்றபோது, நடக்கும்போது தன்னுடைய கைகள் எப்போதும் விரிந்த நிலையில் இருக்கும். ஆனால், எம்ஜிஆருடைய கைகள் குறுகி இருக்கும். அதற்கு ஏற்றவாறு என்னுடைய உடல் அமைப்பை நான் மாற்றி அமைக்கப் போகிறேன் என்று கூறினார். அவருடைய உழைப்பு குறித்து தனியாகவே பேசலாம்”.

இவ்வாறு மதன் கார்க்கி பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே