சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவில் சாதாரண தொண்டராக இருப்பதும் கூட பெருமைக்குரியது.
எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் அமலாகியுள்ளன” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழக அரசியல் நேற்று, இன்று, நாளை என அப்போதும் எம்ஜிஆரை சுற்றியே சுழலும்.
மக்களுக்காக பல திட்டங்களைக் கொடுத்து அசைக்க முடியாத தலைவராக எம்.ஜி.ஆர். இருந்தார்” எனக் குறிப்பிட்டார்.
தமிழகத்திற்கு நலத்திட்டங்களைப் பெறும் நோக்கத்திற்காகவே மத்திய அரசை ஆதரிப்பதாகத் தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம் மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிக்காத போதே பல்வேறு நலத் திட்டங்களை தமிழகத்திற்கு பெற்றுத் தந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.