கேரளாவில் பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தனி சேனல் தொடக்கம்

நாட்டில் உள்ள மாநிலங்களிலேயே முதல்முறையாக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்து மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக தனியாக ஒரு தொலைக்காட்சி சேனலை கேரள அரசு நேற்று தொடங்கியது.

‘சபா டிவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேனல் தொடக்க விழா நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா காணொலி மூலம் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

மாநிலங்களவை, மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு தனியாக சேனல் இருக்கிறது.

ஆனால்,மாநிலச் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்புச் செய்ய எந்த மாநிலத்திலும் தனியாகச் சேனல் இல்லை. ஆனால், நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலம், இந்தச் சேனலை மலையாளத்தின் சிங்கம் ஆண்டின் முதல்நாளான நேற்று தொடங்கியது.

மேலும், தொலைக்காட்சி தொடங்கப்பட்ட அதே நேரத்தில் அதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தையும், சட்டப்பேரவை சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன், முதல்வர் பினராயி விஜயன் சேர்ந்து தொடங்கி வைத்தனர்.

பேரவை சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் கூறுகையில் ‘ இந்த சபா டிவி தொடங்கப்பட்டதன் நோக்கமே, மக்களிடையே பேரவை நிகழ்ச்சிகள் குறித்த விழிப்புணர்வுஉண்டாக்க வேண்டும்,

விவாதங்கள் குறித்து தெரிய வேண்டும், மசோதாக்கள் நிறைவேறுவது பற்றி தெரிந்து கொள்ளவும் இந்த சேனல் தொடங்கப்பட்டது.

பல்வேறு சேனல்களில் நேரம் குறித்து ஒதுக்கீடு கிடைத்தபின், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேரவையில் நடக்கும் விவாதங்கள் குறித்துநேரலையில் ஒளிபரப்புச் செய்யப்படும்.

இந்த சேனல் தொடங்கப்பட்டதோடு, ஓடிபி பிளாட்பார்ம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த சேனலைக் காண முடியும்.

மேலும், இந்தச் சேனலில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தங்கள் தொகுதி குறித்து பேசவும், சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

கடந்த ஆண்டு பேரவையில் காகிதப்பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு அனைத்தும் மின்னணுமயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசுக்கு ஓர் ஆண்டில் ரூ.30 கோடி சேமிக்கப்படும்.

மாநிலத்தின் பல்வேறு கலைகளையும், கலாச்சாரங்களையும் விளக்கும் வகையில் பிரத்யேகத் திரைப்படங்களும் இந்தச் சேனலில் ஒளிபரப்பாகும், இல்லாவிட்டால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த சேனலுக்கு வரவேற்பு இருக்காது ‘ எனத் தெரிவித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே