இங்கிலாந்தை கிழித்து எறிந்த இஷான் கிஷன்; மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ‘சேஸிங் கிங்’ கோலி: இந்தியா அபார வெற்றி

இஷான் கிஷனின் காட்டடி ஆட்டம், கோலியின் பொறுப்பான பேட்டிங் ஆகியவற்றால், அகமதாபாத்தில் நேற்று நடந்த 2-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

அதிரடி அறிமுகம்..ஆட்டநாயகன்

இஷான் கிஷனுக்கு இதுதான் சர்வதேச அறிமுகப்போட்டி என்று கூறினால் யாரும் நம்பமாட்டார்கள். இங்கிலாந்து அணி வீரர்களின் பந்துவீச்சை கிஷன், கிழித்து தொங்கவிட்டார். அதிலும் ரஷித், டாம்கரன், ஆர்ச்சர் என யார் பந்தையும் பாராமல் அடித்து நொறுக்கிய கிஷன் 28 பந்துகளில் அரைசதம் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். முதல் போட்டியிலேயே கலக்கிய இஷான் கிஷனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

டி20 உலககக் கோப்பை நெருங்கும் வேளையில் இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் “எக்ஸ்ப்ளோஸிவ் ஓபனிங் பேட்ஸ்மேன்” இஷான் கிஷான். இவர் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய வேண்டிய அவசியம்கூட இல்லை. முக்கியமான சில போட்டிகளில் இதுபோன்று மிரளவைக்கும் ஆட்டத்தை வெளிக்காட்டினாலேய உலகக் கோப்பையில் எதிரணிக்கு “கிலி” வந்துவிடும்.

இந்திய அணியின் கேப்டன் கோலி, முதல் ஆட்டத்தில் தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். ஆனால், இந்தப் போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி,இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார். கோலி 49 பந்துகளில் 73 ரன்கள்(3சிக்ஸர்,5பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே