சிசிடிவி கேமிராக்களால் குறைந்துள்ள குற்றங்களின் புள்ளி விவரங்கள்…

சென்னை மாநகரில் 20 அடிக்கு இரண்டு சிசிடிவி கேமராக்கள் என ஒட்டுமொத்த நகரம் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிசிடிவி கேமராக்கள் மூலம் குறைந்துள்ள குற்றங்களின் புள்ளிவிபரத்தை இப்போது பார்க்கலாம்.

மூன்றாவது கண் என்ற பிரம்மாண்டமான சிசிடிவி கண்காணிப்பு திட்டத்திற்காக அண்மையில் தமிழக அரசின் விருதைப் பெற்றது சென்னை மாநகர காவல்துறை. மிகத்தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் சிசிடிவி களால் குற்றங்கள் எந்த அளவு குறைந்து உள்ளன என்கிற விவரங்களை இப்போது பார்க்கலாம். குற்றங்களை குறைப்பதன் முதல் படிதான் சிசிடிவி பொருத்தி கண்காணிப்பது. அதனால் குற்றங்கள் பெருமளவு குறைந்து இருக்கிறது என்கின்றனர், சென்னை மாநகர காவல் துறையினர். இதுகுறித்து கிடைத்த புள்ளிவிவரங்களை தற்பொழுது பார்க்கலாம்.

செயின் பறிப்பு சம்பவங்கள் – 2018 ஜனவரி முதல் ஜூன் வரை 258 செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 2019 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 137 செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 50 சதவிகிதம் குறைவாகும்.

பொது இடங்களில் நடக்கும் தகராறு – 2018 ஜனவரி முதல் ஜூன் வரை 24 ஆயிரத்து 447 சம்பவங்களும், 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 14 ஆயிரத்து 457 சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 41 சதவிகிதம் குறைவு.

கொடும் காய வழக்கு – 2018 ஜனவரி முதல் ஜூன் வரை 32 கொடும் காய வழக்கு சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. 2019 ஜனவரி முதல் ஜூன் வரை 24 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது 25 சதவிகிதம் குறைவு.

சுவற்றில் துளை இட்டு திருடுவது – 2018 ஜனவரி முதல் ஜூன் வரை 438 சுவற்றில் துளையிட்டு திருடும் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. இது 2019 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 360 சம்பவங்களாக நடைபெற்றிருக்கின்றன. கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது 17 சதவிகிதம் குறைவாக இருக்கிறது.

20 அடிக்கு இரண்டு கேமராக்கள் என்பது மிகப் பெரிய சாதனை தான். எனினும் அதன் முழுப் பயனை அறுவடை செய்ய லைவ் மானிட்டரிங் தளத்திற்கு சென்னை மாநகர காவல்துறை நகர வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே