போர் பதற்றத்தை தணிக்க இந்தியாவின் உதவியை வரவேற்கிறோம் – ஈரான் தூதர் அலி செகேனி

அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், இந்தியா முன்னெடுக்கும் அனைத்து முயற்சியையும் வரவேற்கிறோம் என இந்தியாவிற்கான ஈரானிய தூதர் அலி செகினி தெரிவித்துள்ளார்.

ஈரானின் முக்கிய தளபதி காஸிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இதனால் மேற்கு ஆசியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லி ஈரான் தூதரகத்தில் காஸிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

அப்போது பேசிய ஈரான் தூதர் அலி செகேனி, உலகில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா நல்ல பங்கை ஆற்றுவதாக கூறினார்.

ஈராக்கில் அமெரிக்க நிலைகள் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அது ஈரானின் தற்காப்புக்காக நடத்தப்பட்டது. எங்கள் நாடு சமாதானத்தையே விரும்புகிறது. போரை அல்ல என குறிப்பிட்டார்.

தனது நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான விரோதப் போக்குகள் மேலும் அதிகரிக்காது என்று தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தணிக்க, எந்த நாடுகளிலிருந்து வரும் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.

குறிப்பாக இந்தியா எங்களுக்கு ஒரு நல்ல நண்பராக உள்ளதால், பதட்டங்களை அதிகரிக்க அனுமதிக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே