சேலத்தில் IPL போட்டிகளை நடத்த தமிழக அரசு உதவும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தும் வகையில் அதற்கேற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்த தமிழக அரசு உதவும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

13 ஏக்கர் பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட புதிய கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் பழனிசாமி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.

விழாவில், தமிழக அமைச்சர்கள், பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், இந்திய கிரிக்கெட் வாரிய, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ராகுல் டிராவிட் பந்துவீச, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பந்தை அடித்து மகிழ்ந்தார். 

விழாவில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், சேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

தமிழக அரசும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும் சேலம், கோவை, திருநெல்வேலி போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் கிரிக்கெட் மைதானங்களை தொடங்குவது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து உருவாக்க இதுபோன்ற மைதானங்கள் உதவும் என்றும் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர் சிறப்புரை ஆற்றிய பிசிசிஐ முன்னாள் தலைவர்  ஸ்ரீனிவாசன், வரலாற்றில் முதன்முறையாக தமிழக முதலமைச்சரே விளையாட்டு மைதானத்தை தொடக்கி வைத்துள்ளதாகக் கூறினார்.

நடப்பாண்டில் இதே மைதானத்தில் டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று கூறிய ஸ்ரீனிவாசன், ஐபிஎல் போட்டிகள் புதிய மைதானத்தில் நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.

ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் கேட்டுக்கொண்டது போன்று, ஐபிஎல் போட்டிகளை நடத்த தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு ஏற்படுத்தி தரும் என்று உறுதியளித்தார்.

புதிய கிரிக்கெட் மைதானத்தை கிராமத்து இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு இணையாக தமிழக விளையாட்டு ஆணையம் விளங்குவதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே