ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..

சீனாவில் துவங்கி இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் இதுவரை 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் மார்ச் 29 ஆம் தேதி துவங்குவதாக இருந்த ஐபிஎல் தொடரானது ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான அடுத்த 2 ஒருநாள் போட்டிகளும் பார்வையாளர்களின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பங்குதாரர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டும் இத்தகைய முடிவினை எடுத்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஐபிஎல் தொடர் முழுவதையும் பிசிசிஐ நிறுத்தவில்லை.

15 நாட்கள் தாமதமாக துவங்கப்படலாம் எனவும் இதுகுறித்து இந்திய அரசு, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் ஆலோசனை செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே