இஸ்லாமிய அமைப்புகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் தலைமைச் செயலாளர்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டத்தைக் கைவிடும் வண்ணம் இஸ்லாமியப் பிரதிநிதிகளிடம் தமிழக அரசுத் தரப்பில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இதனை தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

குடியுரிமைச் சட்டத்தில் (சிஏஏ) திருத்தம் கொண்டுவந்து மத்திய அரசு நிறைவேற்றியது.

அதில் இஸ்லாமியர்கள், இலங்கை மக்களுக்கான குடியுரிமை சம்பந்தமாக அவர்களைச் சேர்க்காமல் விலக்களிக்கப்பட்டது இஸ்லாமியர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது.

குடியுரிமைச் சட்டம் என்பிஆர், என்ஆர்சியை இஸ்லாமியர்களும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

என்பிஆரில் புதிதாக 3 கேள்விகள் சேர்க்கப்படுவதும், அதையொட்டி என்ஆர்சியில் அதை தொடர்புபடுத்தும்போது பாதிப்பு வரலாம் என்பதால் அதை நீக்கச்சொல்லி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி ஷாகின் பாக் போல் தமிழகத்தில் வண்ணாரப்பேட்டை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

எதிர்க்கட்சிகள் சிஏஏ குறித்து விவாதிக்க வேண்டும், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் பலமுறை முயற்சித்தும் அரசு அதை அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் இந்தப் பிரச்சினையின் தீவிரம் குறையாமல் இருப்பதால் தமிழக அரசு இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து இன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் விடுத்துள்ள அறிவிப்பு:

‘குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 தொடர்பாக பொதுமக்களிடையே, குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினரிடையே, மேற்படி சட்டம் குறித்து ஏற்பட்டிருக்கும் ஐயப்பாடுகளைக் களையும் வகையில் இஸ்லாமிய சமுதாயத் தலைவர்களை நேரில் கலந்து ஆலோசிக்க வரும் சனிக்கிழமை (14.03.2020) அன்று மாலை 4 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகம், பழைய கட்டிடம் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் எனது தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’.

இவ்வாறு தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே