பாகிஸ்தான் விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று கராச்சியின் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த விபத்தில் 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இரண்டு பேர் உயிர்பிழைத்துள்ள அதிசயம் அரங்கேறியுள்ளது.

லாகூரில் இருந்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று கராச்சிக்கு புறப்பட்டு சென்றது.

தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக திடீரென விபத்தில் சிக்கிய அந்த விமானம் குடியிருப்பு பகுதியில் மோதி நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்களை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விபத்து நடந்த இடமே போர்க்களம் போல காட்சியளிக்கிறது.

முஸ்லிம்களின் பண்டிகையான ரம்ஜான் நெருங்கும் சூழலில் இந்த விபத்து பாகிஸ்தான் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உயிர்பிழைத்தவர் பேசியது என்ன?

இந்நிலையில் இவ்விபத்து குறித்து சிந்து மாகாண அரசு செய்தி தொடர்பாளர் முர்தசா வஹாப் தெரிவிக்கையில், இந்த விபத்தில் இருவர் உயிர் பிழைத்துள்ளதாகவும் அவர்களில் ஒருவர் பஞ்சாப் வங்கியின் தலைவரான ஸாஃபர் மசூதும், இன்னொருவர் விமானம் விழுந்த பகுதியில் வசித்தவர் என கூறினார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் வங்கி தலைவர் ஸாஃபர் மசூதை சந்தித்த சிந்து மாநில முதல்வர் முராத் அலி ஷா நலம் விசாரித்த போது அவரிடம் நன்றி தெரிவித்த ஸாஃபர் மசூத், இறைவன் கருணையுடன் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிர் தப்பிய மற்றொருவரான முகமது சுபைர் என்பவர் கூறுகையில், எங்கும் தீப்பிழம்பாக இருந்ததாகவும், எங்கும் மரண ஓலமாக சத்தம் கேட்டதாகவும், அப்போது 8வது வரிசையில் அமர்ந்திருந்த தான் சீட் பெல்ட்டை கழற்றி வெளிச்சம் வந்த பகுதியை நோக்கி சென்றதாகவும் அவர் கூறினார்.

91 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் அந்த விமானத்தில் பயணித்ததாக தெரியவந்துள்ளது.

இதனிடையே விமானத்தில் இரு எஞ்சின்களின் பவரும் குறையத்தொடங்கியதாக விபத்துக்கு முன்னதாக விமானிகள் தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் அரசு விமான நிறுவனமான பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் (முன்னதாக ஓரியண்ட் ஏர்லைன்ஸ்) 1946ல் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 51 பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே