ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள் ரிஷப் பண்ட் தவிர மற்ற எல்லா விக்கெட்டுகளும் மளமளவென சரிந்துவிட்டன. 329 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்தியா.

அடுத்து களமிறங்கி இருக்கும் இங்கிலாந்து முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று காலை 9:30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 300 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா.

இன்று ரிஷப் பண்ட் மற்றும் அக்ஸர் படேல் மீண்டும் தங்கள் இன்னிங்ஸைத் தொடர்ந்தார்கள்.

ஆனால், ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள் ரிஷப் பண்ட் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்துவிட்டனர். இதனால், 329 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்தியா.

77 பந்துகளில் 58 ரன்களைக் குவித்து தன் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் களத்தில் நின்ற ரிஷப் பண்ட், தன் ஆறாவது டெஸ்ட் அரை சதத்தைப் பதிவு செய்தார்.

அக்ஸர் படேல், இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், மொஹம்மத் சிராஜ் ஆகியோர் ஒட்டுமொத்தமாக 10 ரன்களுக்குள் தங்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்துவிட்டார்கள்.

இதில் இருவர் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்தின் அனுபவமிக்க மொயின் அலி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து புதிய வேகப்பந்து வீச்சாளரான ஒலி ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், சர்வதேச கிரிக்கெட் போட்டி அனுபவம் அதிகம் இல்லாத சுழற்பந்து வீச்சாளர் ஜால் லீச் 2 விக்கெட்டுகளையும், ஜோ ரூட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

95.5 ஓவர் முடிவில் 329 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது இந்தியா.

தற்போது தன் முதல் இன்னிங்ஸுக்காக களத்தில் இறங்கி இருக்கிறது இங்கிலாந்து. தொடக்க ஆட்டக்காரரான ராரி பர்ன்ஸை தன் முதல் ஓவரிலேயே வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பியுள்ளார் இஷாந்த் ஷர்மா.

அப்போது இங்கிலாந்து ஒரு ரன்னைக் கூட எடுத்திருக்கவில்லை. டாம் சிப்லி மற்றும் டான் லாரன்ஸ் விளையாடி வருகிறார்கள்.

11 ஓவர்கள் முடிவில் 24 ரன்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது இங்கிலாந்து.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே