இந்திய பங்குச் சந்தைகளில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு

கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 2900 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது

கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் தொழில், வணிகம் ஆகிய துறைகளில் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் எதிரொலியாகப் பெட்ரோலிய விலை வீழ்ச்சி, வெளிநாட்டவருக்கு விசா ரத்து, விமானப் போக்குவரத்து நிறுத்தம் எனப் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

இவையனைத்தும் உலக நாடுகளில் பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியப் பங்குச்சந்தைகளும் இன்றைய வணிகநேரத் தொடக்கம் முதலே வீழ்ச்சியைக் கண்டன.

பிற்பகலில் ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மூவாயிரத்து 204 புள்ளிகள் சரிந்தது.

2008ஆம் ஆண்டுக்குப் பின் ஒரேநாளில் ஏற்பட்ட அதிக வீழ்ச்சி இதுவாகும்.

வணிகநேர முடிவில் சென்செக்ஸ் ஓரளவு மீட்சியடைந்து இரண்டாயிரத்து 919 புள்ளிகள் சரிந்து 32,778 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 825புள்ளிகள் சரிந்து ஒன்பதாயிரத்து 633 ஆக இருந்தது.

வங்கி, பெட்ரோலியம், உலோகம் ஆகிய தொழில்களைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன.

எஸ் வங்கி, பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றின் பங்கு விலை 15 விழுக்காடும், ஸ்டேட் வங்கியின் பங்கு விலை 14 விழுக்காடும், ஐடிசி, வேதாந்தா நிறுவனங்களின் பங்குவிலை 13 விழுக்காடும் வீழ்ச்சியடைந்தது.

இதனால் முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே