தீவிரவாதத் தொடர்பு மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறையினர் நாடு முழுவதும் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, நாடு முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை அதிகாலையில் தொடங்கிய இந்தச் சோதனை தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள், குழுக்கள், பிஎஃப்ஐ அலுவலகங்கள் என நாடுதழுவிய அளவில் பல இடங்களிலும் நடந்து வருகிறது. தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறையினரும் உள்ளூர் போலீஸார் உதவியுடன் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மெகா சோதனையில், தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல், தடை செய்யப்பட்ட இயங்கங்களில் இணையும் படி மக்களைத் தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள், வசிக்கும் பகுதிகளில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாகவும், பிஎஃப்ஐயின் தேசிய, மாநில, மற்றும் உள்ளூர் தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், கோவை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மற்றும் தென்காசியில் உள்ள பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளிலும், சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள எஃப்பிஐ மாநில தலைமை அலுவலகத்திலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.

இதுகுறித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தனது அறிக்கை ஒன்றில், “பிஎஃப்ஐ-யின் தேசிய, மாநில, உள்ளூர் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகின்றன. மாநிலத் தலைமை அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க ஏஜென்சிகளை பயன்படுத்தும் பாசிஸ போக்கை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இந்தச் சோதனைகளை எதிர்த்து மங்களூருவில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கர்நாடகா போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, கோவையில் சோதனை, கைது: 

தமிழகத்தில் சென்னை, கோவை என பல இடங்களில் சோதனை நடைபெறுகிறது. கோவை, கரும்புக்கடையில் உள்ள பிஎஃப்ஐ நிர்வாகி இஸ்மாயில் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் , இஸ்மாயிலை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு போராட்டம், கூச்சல், குழப்பம் என பதற்றமான சூழல் உருவானது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே