109 ரயில்வே வழித்தடங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு..!

நாட்டில் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

பயணியர் ரயில் போக்குவரத்தில் ஆண்டிற்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதால், சில வழித்தடங்களில் தனியார் ரயிலை இயக்குவதற்கு அனுமதி வழங்குவது என மத்திய அரசு முடிவு செய்தது.

மேலும், ரயிலின் வருவாயை எப்படி பகிர்ந்து கொள்வது என்று ரயில்வே துறை பேசி வந்தது.

இதனை தொடர்ந்து இந்தியாவில் முதலாவது தனியார் ரயில், டில்லி – உ.பி.,யின் லக்னோ இடையே இயக்கப்பட்டது.

இந்நிலையில், நாட்டின் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு, மத்திய ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

109 வழித்தடங்களிலும், அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த, 150 ரயில்கள் இயக்கப்படும். 

தனியார் துறை முதலீடு மூலம், ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் என எதிர்பார்க்கப்படுவதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த முயற்சியின் நோக்கம் குறைக்கப்பட்ட பராமரிப்பு, குறைக்கப்பட்ட போக்குவரத்து நேரம், வேலைவாய்ப்பை அதிகரித்தல், மேம்பட்ட பாதுகாப்பை வழங்குதல், பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்குதல் மற்றும் பயணிகள் போக்குவரத்து துறையில் பற்றாக்குறையை குறைத்தல் ஆகியவற்றுடன் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதாகும்.

தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டாலும் இந்த ரயில்களை இந்திய ரயில்வேயின் டிரைவர் மற்றும் காவலர் இயக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் ரயில்களின் செயல்பாடு சரியான நேரம், நம்பகத்தன்மை, ரயில்களின் பராமரிப்பு போன்ற முக்கிய செயல்திறன்களை மேம்படுத்துவதுவதில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே