ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டதால் அரக்கோணம்-காட்பாடி மார்க்கத்தில் ரயில்வே சேவை பாதிக்கப்பட்டது.

சரக்கு ரயில் தடம்புரண்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மற்ற ரயில்கள் அரக்கோணம், திருவாலங்காடு, மோசூர் ரயில் நிலையங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சரக்கு ரயில் தடம்புரண்டதால் மற்ற ரயில்களில் செல்லும் பயணிகள் உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

ரேணிகுண்டா நோக்கி சென்ற ரயில்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா நோக்கி சுமார் 43 வேகன்களுடன் சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியே ரேணிகுண்டா சென்றுவிட்டு அங்கிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் சென்னை துறைமுகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றடையும்.

22வது பெட்டி தடம்புரண்டது

இந்நிலையில் இன்று அதிகாலையில் சென்னை காட்பாடி மார்க்கத்தில் சென்று கொண்டிருந்த ரயில் அரக்கோணம், மோசூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது இன்று அதிகாலை திடிரென தடம்புரண்டது. 43 பெட்டிகள் கொண்ட கூட்ஸ் ரயிலில் 22வது வேகன் மட்டும் தடம்புரண்டுள்ளது. இதை அடுத்து ரயில் கட்டுப்பாட்டை இழந்ததை புரிந்து கொண்ட ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி உள்ளார். குறிப்பிட்ட இடத்தில் ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்ததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

வேலைக்கு செல்வோர் தவிப்பு

உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ரயில்வே தொழிலாளர்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சரக்கு ரயில் நடுவழியில் நின்றதால் மற்ற ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதிகாலை நேரம் என்பதால் ஒரு சில ரயில்கள் மட்டும் வந்த நிலையில் மோசூர் மற்றும் திருவாலங்காடு ரயில் நிலையங்களில் தலா ஒரு ரயில் நிறுத்தப்பட்டது. அதிகாலை நேரத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர்.

ரயில்கள் திருப்பிவிடப்பட்டன

தண்டவாள சீரமைப்பு பணிகள் முடிவடைய கால தாமதம் ஆகும் என்பதாலும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லவேண்டிய நேரம் என்பதாலும் மோசூர், திருவாலங்காடு ரயில்கள் மீண்டும் வந்தவழியே திருப்பிவிடப்பட்டன. ஆனாலும் அரக்கோணம் சென்னை மார்க்கத்தில் புறநகர் மற்றும் விரைவு ரயில் சேவையில் பாதிப்புகள் ஏதும் இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்த தண்டவாளத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடையும் வரை மாற்றுப் பாதையில் மற்ற ரயில்களை இயக்க ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே