822 கோடி கடனில் ஏர் இந்தியா..!

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை அழைத்துச் செல்வதற்காக விமானங்களை இயக்கியதில் 822 கோடி ரூபாய் கட்டணத்தை மத்திய அரசு இன்னும் செலுத்தவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

52 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வந்து சேர வேண்டிய தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஏர் இந்தியா நிறுவனம் அளித்துள்ள பதிலில், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை அழைத்துச் செல்வதற்காக விமானங்களை இயக்கியதற்காக பல அமைச்சகங்கள் 822 கோடி ரூபாயை இன்னும் செலுத்தாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் கடனாகப் பெற்ற டிக்கெட்டுகளுக்கு 526 கோடியே 14 லட்சம் ரூபாயைச் செலுத்தவில்லை என்றும்; மீட்புப் பணிகளுக்காக 9 கோடியே 67 லட்சம் ரூபாயும்; வெளிநாட்டுக் குழுவினரை அழைத்துச் சென்றதற்காக 12 கோடியே 65 லட்சம் ரூபாயும் மத்திய அரசால் இன்னும் செலுத்தப்படவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே