இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்று பலப்பரீட்சை!

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி, இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற, இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதனையடுத்து, தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறுகிறது.

2வது ஒருநாள் போட்டியில் காயத்தால் அவதிப்பட்ட ரோகித் சர்மா, தவான் ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறங்குவார்களா? என்பது போட்டிக்கு முன்னரே தெரியவரும்.

பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், ரன் மழை பொழியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் மிகப் பெரிய பலமாக கருதப்படுகின்றனர்.

அதோடு பந்துவீச்சில் பும்ரா கட்டுக்கோப்புடன் பந்துவீசுவதும், குல்தீப் யாதவ், சமி ஆகியோர் அவ்வப்போது விக்கெட்டுகளை வீழ்த்துவது பலமாக பார்க்கப்படுகிறது.

மறுபக்கம், மிடில் ஆர்டரில் சீரான இடைவேளையில் விக்கெட் வீழ்வது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் சொதப்பி வருவது, அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதோடு 2வது போட்டியில் காயமடைந்த ரோகித், தவான், இன்றைய போட்டியில் விளையாடுவார்களா? என்பதும், விளையாடினாலும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

இறுதி கட்டத்தில் பும்ராவை தவிர, மற்ற பந்துவீச்சாளர்கள் அதிக ரன்கள் விட்டுக்கொடுப்பதும் இந்திய அணிக்கு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே