இந்தியா – நேபாள பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் – ஷர்மா ஒலி நம்பிக்கை..!!

இந்திய ராணுவத் தளபதி நரவானேவை சந்தித்த நேபாள பிரதமர் கே.பி.ஒலி, நேபாளமும் இந்தியாவும் நீண்டகால சிறப்பு உறவை கொண்டிருப்பதாக கூறினார்.

இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, நேபாளத்திற்கு சென்றுள்ளார். நேற்று நேபாள ராணுவ தலைமை தளபதி பூர்ண சந்திர தாப்பாவை சந்தித்து பேசினார். அப்போது, நரவானேக்கு, நேபாள ராணுவத்தின் கவுரவ ஜெனரல் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (நவ.,6) நேபாள பிரதமர் கே.பி.ஒலியும், நரவனேவும் சந்தித்து பேசினர். இச்சந்திப்பு இரு நாட்டு உறவை புதிய நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய எல்லையான லிபுலேக்கில் சாலை அமைத்ததற்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்தது. 

அதனை தங்கள் நாட்டுடன் இணைத்து நேபாளம் புதிய வரைபடம் வெளியிட்டது.

இதனால் இரு நாடுகளிடையே பிரச்னை ஏற்பட்டது. தற்போது சீனாவின் ஆக்கிரமிப்பு நேபாளத்தில் அதிகரித்திருப்பதால் இந்தியாவுடன் மீண்டும் நேபாளம் நெருக்கம் காட்டி வருகிறது.

இச்சந்திப்பின் போது, “நேபாளமும் இந்தியாவும் நீண்டகால சிறப்பு உறவை கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையேயான பிரச்னைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்” என பிரதமர் ஒலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே