கொரோனா ஒழிப்பில் இறுதிக்கட்டத்தில் உள்ள இந்தியா: ஹர்ஷ்வர்தன்

கொரோனா வைரஸ் ஒழிப்பில் இந்தியா இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், முழு வெற்றி காண மூன்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசியதாவது: பிற நாடுகளைப் போல் இல்லாமல், நமது நாட்டில் கொரோனா தடுப்பூசி விநியோகம் சீராக உள்ளது. ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகளின்படி, உலகின் பிற நாடுகளில் புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகளை ஒப்பிடும்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகள் மிகக்குறைவான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது .

ஏழை, வளர்ச்சியடையாத நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகத்துக்கே ஒரு மருந்தகமாகத் திகழ்கிறது. 62 நாடுகளுக்கு 5.52 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்கியிருக்கிறது. உலகமே மருத்துவ நெருக்கடியை சந்தித்திருக்கும் வேளையில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதில் பிரதமர் உறுதியாக இருந்தார். கொரோனா வைரஸ் ஒழிப்பில் இந்தியா இறுதிக் கட்டத்தில் உள்ளது.

இப்போது இதில் நாம் முழு வெற்றி காண மூன்று வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முதலாவதாக கொரோனா தடுப்பூசி திட்டத்தை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும். இரண்டாவதாக கொரோனா தடுப்பூசி பின்னால் உள்ள அறிவியலை நம்ப வேண்டும். மூன்றாவதாக, நாமும் நமக்கு நெருக்கமானவர்களும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே