கண்டேன் கண்டேன் இடது கை சேவாக்கைக் கண்டேன்: ரிஷப் பந்த் அதிரடியில் மயங்கிய இன்சமாம் உல் ஹக்

நான் சேவாகுக்கு எதிராக ஆடியுள்ளேன், அவரும் சூழ்நிலையெல்லாம் கவலைப்பட மாட்டார். பந்தைப்பார் அடி என்ற வகையறா அவர். பீல்டர்கள் அருகில் இருந்தாலும் அடிதான் பவுண்டரியில் இருந்தாலும் அடிதான். சேவாகுக்குப் பிறகு இப்படி எந்தக் கவலையும் இல்லாமல் ஆடும் ஒரு வீரரைப் பார்க்கிறேன்.

ரிஷப் பந்த் பேட் செய்வது இடது கையில் சேவாக் பேட் செய்வது போல் இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியா தொடரில் சிட்னியில் 97 என்று ஆஸ்திரேலியா வயிற்றில் புளியைக் கரைத்து 406 ரன் இலக்கை விரட்டி வென்று விடுவேன் என்று அச்சுறுத்தினார், பிரிஸ்பன் என்ற ஆஸ்திரேலியக் கோட்டையை 5ம் நாளில் 329 ரன்களை விரட்டி தகர்த்தார் ரிஷப் பந்த்.

அன்று அகமதாபாத்தில் 121/5, பிறகு 146/6 என்ற நிலையில் ஒரு பிளம்ப் எல்.பி. அவுட் கொடுக்கப்படாத மோசடியை நன்றாகப் பயன்படுத்தி ரிஷப் பந்து மிகப்பிரமாதமாக இங்கிலாந்து பந்து வீச்சை காயடித்தார். உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனை ரிவர்ஸ் ஸ்கூப் ஆடி உலகையே மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்தார்.

82 பந்துகளில் அரைசதம் கண்ட ரிஷப் பந்த் அடுத்த 33 பந்துகளில் சதம் கண்டு ஆட்டத்தை இங்கிலாந்தின் கையிலிருந்து பிடுங்கினார்.இந்நிலையில் கில்கிறிஸ்ட் உன்னிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் என்று சர்டிபிகேட் வாங்கினார், பலரும் அவரைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

இந்நிலையில் சேவாகை இடது கையில் பேட் செய்து பார்ப்பது போல் இருந்தது என்று இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.

சேவாகும் இப்படித்தான் ஈவு இரக்கமின்றி எதிரணி பவுலர்களை வெளுத்து வாங்கியதை நாம் பார்த்து மகிழ்ந்துள்ளோம்.

இந்நிலையில் யூடியூப் சேனலில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறும்போது, “ரிஷப் பந்த் அற்புதமான வீரர், நீண்ட காலத்துக்குப் பிறகு எந்த அழுத்தமும் ஒன்றும் செய்ய முடியாத ஒரு வீரரைக் கண்டேன்.

146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் விழுந்த பிறகு அவர் ஆடிய விதம் உண்மையில் மறக்க முடியாதது. யாரும் இப்படி ஆடவில்லை. எதிரணி எவ்வளவு ரன்கள் எடுத்திருக்கிறார்கள் என்ற கவலையும் ரிஷப் பந்த்துக்கு இல்லை, பிட்ச் எப்படி இருந்தாலும் அவருக்குக் கவலையில்லை. வேகப்பந்து, ஸ்பின் இரண்டுக்கும் ஒரே ட்ரீட்மெண்ட் தான்.

ரிஷப் பந்த் பேட்டிங்கை நன்றாக என்ஜாய் செய்து பார்த்தேன். சேவாக் இடது கையில் பேட் செய்தால் எப்படி இருக்கும் அது போல் இருந்தது ரிஷப் பந்த் பேட்டிங்.

நான் சேவாகுக்கு எதிராக ஆடியுள்ளேன், அவரும் சூழ்நிலையெல்லாம் கவலைப்பட மாட்டார். பந்தைப்பார் அடி என்ற வகையறா அவர். பீல்டர்கள் அருகில் இருந்தாலும் அடிதான் பவுண்டரியில் இருந்தாலும் அடிதான். சேவாகுக்குப் பிறகு இப்படி எந்தக் கவலையும் இல்லாமல் ஆடும் ஒரு வீரரைப் பார்க்கிறேன்.

ரிஷப் பந்த் இங்குமட்டுமல்ல ஆஸ்திரேலியாவிலேயே செய்து காட்டினார். இந்தியாவில் சச்சின், திராவிட் இருந்தார்கள், இப்போது ரோகித், விராட் இருக்கிறார்கள். ஆனால் ரிஷப் பந்த் உண்மையில் ஆச்சரியமளிக்கிறார். அவரது தன்னம்பிக்கை அசாத்தியமானது, இப்படிப்பட்ட ஒரு வீரரை நான் கண்டதில்லை” என்றார் இன்சமாம் உல் ஹக்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே