தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா; தானே மாநகராட்சியில் மார்ச் 13-ம் தேதி வரை 31-ம் தேதி வரை லாக்டவுன் அறிவிப்பு

மகாராஷ்டிர மாநிலம் தானே மாநகராட்சியில் உள்ள 89 கரோனா ஹாட்ஸ்பாட்டுகளில் மார்ச் 13-ம் தேதி வரை 31-ம் தேதிவரை லாக்டவுன் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து, இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.

இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

சிகிச்சை பெறுபவர்களில் 86.25 சதவீதத்துக்கும் அதிகமானோர், இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். இதில் ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 11,141 பேரும், கேரளாவில் 2,100 பேரும், பஞ்சாபில் 1043 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவுவதற்காக உயர்மட்ட பல்துறை பொது சுகாதாரக் குழுக்களை அம்மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கோவிட்-19 கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத் துறைகளுக்கு உதவுவதற்காக இக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாநிலங்களில் உள்ள பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட இக்குழுவினர், தங்களது ஆலோசனைகளை தலைமை செயலாளர், சுகாதார செயலாளருக்கு வழங்குகின்றனர்.

குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அங்கு பிப்ரவரி 9-ம் தேதி வரை தினசரி பாதிப்பு என்பது சராசரியாக 2489 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால் பிப்ரவரி 10-ம் தேதிக்கு பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. தற்போது 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

கரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமராவதி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புனே மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாக்பூர் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் மும்பையின் புறநகர் பகுதியான தானே மாவட்டத்திலும் தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த மாநகராட்சியில் மட்டும் இதுவரை 89 ஹாட்ஸ்பாட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடுமையான கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக தானே மாநகராட்சியில் உள்ள 89 ஹாட்ஸ்பாட்டுகளில் மார்ச் 13-ம் தேதி வரை 31-ம் தேதிவரை லாக்டவுன் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் வெளியே செல்லவும், மற்றவர்கள் இங்கு வரவும் முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய செயல்பாடுகளை தவிர அனைத்தும் தடை செய்யப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே