கோவோவாக்ஸ் தடுப்பூசி செப்டம்பரில் அறிமுகம்: புதிய வகை வைரசையும் எதிர்க்கும்

கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசி சோதனை இந்தியாவில் வரும் செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படும் என சீரம் நிறுவன சிஇஓ அதார் பூனவல்லா கூறி உள்ளார். இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர மேலும் சில தடுப்பூசிகள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கோவோவாக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் சோதனை செய்யப்பட இருப்பதாக சீரம் நிறுவன சிஇஓ அதார் பூனவல்லா நேற்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் கோவிஷீல்டு மருந்து உற்பத்திக்கான அனுமதியை பெற்றுள்ள சீரம் நிறுவனம் கோவோவாக்ஸ் மருந்தை இந்தியாவில் சோதனை செய்யும் உரிமத்தையும் பெற்றுள்ளது. எனவே வரும் செப்டம்பரில் கோவோவாக்ஸ் அறிமுகப்படுத்தப்படலாம் என அதார் பூனவல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி இங்கிலாந்து, தென் ஆப்ரிக்காவில் மரபணு மாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரசையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது என சீரம் நிறுவனம் கூறி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே