கரோனா தொற்று தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழலில், திட்டமிட்டபடி ‘சுல்தான்’ திரைப்படம் வெளியாகுமா என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு, இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது
ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்க வெளியீட்டுக்கு இந்தப் படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் விநியோக உரிமையை யாருக்கும் கொடுக்காமல், தமிழகத்தில் நேரடியாக வெளியிட ட்ரீம் வாரியர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கார்த்தியின் முந்தைய படங்களை விட, அதிகமான திரையரங்குகளில் ‘சுல்தான்’ வெளியாகும் எனத் தெரிகிறது.
தற்போது தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் ஏற்கெனவே திரையரங்குகளில் கூட்டம் இல்லாமல் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. எனவே திட்டமிட்டபடி ‘சுல்தான்’ வெளியாகுமா என்ற சந்தேகத்துக்குப் படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
“எங்களின் நண்பர்கள் பலர் தற்போது அதிகமாகி வரும் கரோனா பரவலை மனதில் வைத்து, சுல்தான் படம் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகுமா என்று கேட்கின்றனர். இப்போதைக்கு அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அதே தேதியில்தான் வெளியிடுகிறோம்.
எனவே முகக்கவசம் அணிந்து, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, திரையில் அதிக உற்சாகத்தைப் பார்த்து மகிழக் காத்திருங்கள்” என்று எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.