ஆயுத பூஜையையொட்டி பூ, பழங்களின் விலை உயர்வு

நாடு முழுவதும் நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள், பழங்கள் மற்றும் வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களின் விலை சற்று அதிகரித்துள்ளது.

வழக்கமாக ஆயுத பூஜைக்கு முன்தினம் அதிகாலையில் கோயம்பேடு சந்தையில் திரண்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு மக்கள் கூட்டம் குறைவாக உள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில், பூக்கள், பழங்களின் விலை அதிகரித்துள்ளது. 

பூக்கள் மற்றும் பழங்களின் விலை சற்று அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு தேங்காய் 25 ரூபாய் தொடங்கி 40 ரூபாய் வரை விற்பனையாகிறது.

ஆனால் பண்டிகை காலங்களில் விலை அதிகரிப்பது வழக்கமானது தான் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.

ஒரு கிலோ மல்லிகைப் பூ ஆயிரத்து 200 ரூபாய்க்கும், சாமந்தி கிலோ 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இதேபோல் ரோஜா, பிச்சிப் பூக்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. பழங்களில், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.

சேலம் வ.உ.சி பூ மார்க்கெட்டில் பூக்கள் கிலோ 50 முதல் 100 ரூபாய்  வரை  அதிகரித்திருக்கிறது. பூசணிக்காய் கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

மதுரை மாட்டுத்தாவணி பூச்சந்தைக்கு பூ வரத்து குறைவாக உள்ளதால், பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பறிக்கப்படும் பூக்கள், மாட்டுத்தாவணி சந்தைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை அடுத்தடுத்து விழாக்கள் வருவதாலும், உள்ளூர் சந்தைகளில் தேவை அதிகரித்த காரணத்தாலும், மாட்டுத்தாவணி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் அங்கு பூக்களின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே