தஞ்சை பெரியகோயில் குடமுழுக்குப் பணிகள் மும்மூரம்..!

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரியும், குடமுழுக்கிற்கு தடை விதிக்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதே சமயம், குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழ் ஆகம விதிப்படி குடமுழுக்கு நடைபெற வேண்டுமென தமிழ் உணர்வாளர்களும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்திவருகின்றன.

ஆனால், தமிழ் ஆகம விதிப்படியும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய தொல்லியல் துறையின் அனுமதி இல்லாமல் நடத்தப்பட உள்ள குடமுழுக்கு விழாவிற்கு தடை விதிக்க வேண்டுமென சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டுமெனக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள, தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், அதனை அவசர வழக்காக விசாரிக்க கோரினார்.

இந்த வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நாளை விசாரிக்க இருக்கிறது.

பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில், குடமுழுக்கிற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தஞ்சை பெரிய கோயில் கோபுர உச்சியில் உள்ள 12 அடி உயர கலசத்திற்கு 24 கேரட் தங்கத்தை கரைத்து முலாம் பூசப்பட்டு வருகிறது.

மேலும், பழைய கொடி மரம் அகற்றப்பட்டு 40 அடி உயரம் கொண்ட புதிய கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது.

வரும் ஒன்றாம் தேதி முதல் எட்டு கால் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக யாகசாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளும், பாரம்பரிய முறையில் வண்ணம் தீட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தஞ்சை கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் தஞ்சை நகர வீதிகளில் உள்ள சுவர்களில் சிவன் ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே