நடிகர் விஜய்யின் பனையூர் வீட்டில் 12 மணி நேரமாக வருமான வரித் துறையினர் சோதனை

பிகில் படத்தில் 300 கோடி ரூபாய் வசூல் சாதனை என்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டு கொண்டாடிய ரசிகர்களால், நடிகர் விஜய் வீட்டில் விடிய விடிய வருமானவரி சோதனை நடந்து வருகின்றது.

நடிகர் விஜய்யின் பிகில்….! 2019 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் தீபாவளிக்கு வெளியான இந்த படம் வசூலை வாரிகுவித்தது.

படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் திரையரங்கில் மட்டும் ஒரு காட்சியாக 100 நாட்கள் ஓடி ஒட்டு மொத்தமாக 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்ததாக டுவிட்டரில் பதிவிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.

விஜய் ரசிகர்களின் இந்த வெறித்தனமான கொண்டாட்டம் டிவிட்டர், முகநூல் ஆகியவற்றில் டிரெண்டிங் அடிக்க, ஈயம் பூசுன மாதிரியும் பூசாத மாதிரியும் தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, பிகில் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்தார்..!

இதனை ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக் கொண்ட வருமான வரித்துறையினர், பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், நாயகன் விஜய், பிகிலின் மதுரை ஏரியாவை வாங்கி வெளியிட்ட பைனான்சியர் அன்பு செழியன் ஆகியோர் தெரிவித்திருந்த கணக்குகள் முற்றிலும் முரண்பட்டதால் அதிரடியாக சோதனையில் இறங்கியதாக கூறப்படுகின்றது.

மதுரை பைனான்சியர் அன்பு செழியனின் சென்னை வீட்டில் இருந்து பிகில் அடிக்க தொடங்கிய வருமானவரித்துறை சோதனை, பிகில் படத்தை வாங்கி திரையிட்ட வினியோகஸ்தர்களையும் வளையத்திற்குள் கொண்டு வந்தது..!

மற்றொரு பிரிவு, பிகிலை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அலுவலகம், கல்பாத்தி அகோரம் வீடு என சோதனையை தீவிரப்படுத்தியது..!

பிகில் படத்தின் பட்ஜெட் வசூல் குறித்த உண்மை நிலவரங்களை கேட்டறிந்தனர்.

அப்போது நடிகர் விஜய்க்கு 50 கோடி ரூபாய் அளவிற்கு சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அட்லிக்கு 25 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

இதையடுத்து 50 கோடி ரூபாய் சம்பள விவரம் உண்மைதானா? என்பதை அறிய நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை மடக்கியது வருமானவரித்துறை..!

ஜாக்குவார் காரில் படப்பிடிப்புக்கு பயணித்த நடிகர் விஜய்யை, வருமானவரித்துறையினர் அவர்களது இன்னோவா காரில் ஏற்றினர்.

இரு பக்கமும் அதிகாரிளுக்கு நடுவில் விஜய்யை அமரவைத்து பனையூரில் புதிதாக கட்டி உள்ள அவரது சொகுசு பங்களாவுக்கு அழைத்து சென்றனர்.

அங்கு செய்தியாளர்கள் தன்னை படம் பிடிப்பதை பார்த்ததும் காருக்குள் குனிந்து கொண்ட நடிகர் விஜய் முழங்கையால் முகத்தை மறைத்தபடி அமர்ந்திருந்தார்.

அடுத்த சில நொடிகளில் மின்னல் வேகத்தில் பங்களாவுக்குள் கார் புகுந்ததும், பங்களா கதவுகள் வேகமாக அடைக்கப்பட்டன.

அங்கு வைத்து பிகில் சம்பளம் தொடங்கி மாஸ்டர் படத்திற்கான சம்பளம் வரை அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு நடிகர் விஜய்யிடம் 11 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விஜய்யின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தெரு முனையிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இரவிலும் சோதனை தொடர்ந்த நிலையில், விஜய் வீட்டில் ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் வருமானம் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

20க்கும் மேற்பட்ட இடங்களில் விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனை 2 வது நாளாக நீடித்து வருகின்றது.

கோடிகளில் சம்பளம் வாங்குவதை கவுரவமாக நினைக்கும் நடிகர்கள், அந்த சம்பளத்துக்கு உரிய வருமான வரியையும் முறையாக செலுத்த வேண்டும் என்ற அக்கறை இல்லையேல் இப்படித்தான் சிக்கிக் கொள்ள நேரிடும் என்கின்றனர் திரை உலகினர்.

அதே நேரத்தில் பிகில் 300 கோடி ரூபாய் வசூலுக்கு முக்கிய காரணகர்த்தாவான, இயக்குனர் அட்லி வீட்டிற்கு மட்டும் இதுவரை வருமானவரித்துறையில் இருந்து ஒருவர் கூட செல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே