வருமான வரி வழக்கை திரும்ப பெறக்கோரி சசிகலா சார்பில் மனு

தனக்கு எதிரான வருமான வரி வழக்கை திரும்பப் பெறக் கோரி சசிகலா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலாவின் சொத்துக்கள் தொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்பு துறை வருமான வரித்துறைக்கு அனுப்பி வைத்தது.

அதன் அடிப்படையில் வருமான வரியாக 48 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என சசிகலாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் சசிகலாவுக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் கடந்த 2008ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த வழக்கானது  நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சசிகலா தரப்பில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் பிறப்பித்த சுற்றறிக்கையில், ஒரு கோடி ரூபாய்க்கும் கீழ் உள்ள வருமான வரி, தொடர்பான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், தனக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுகுறித்த பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே