உள்ளாட்சி தேர்தலில் அமமுக தனித்து வெற்றி கண்டது…!!

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றிருந்தாலும் டிடிவி தினகரனின் அமமுக கட்சி தனித்து போட்டியிட்டு கணிசமான இடங்களை கைப்பற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டம் என அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.

மக்களவை தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன.

ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் நிலைமையோ வேறு.

கூட்டணி கட்சிகளாக போட்டியிடுவதாக அக்கட்சிகளின் தலைமை அறிவித்தாலும், பல்வேறு இடங்களில் தனித்தனியே போட்டியிட நேர்ந்தது.

மக்களிடையே தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தள்ளப்பட்டதே அதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இரண்டு நாட்களாக எண்ணப்பட்ட நிலையில் திமுக அதிக இடங்களில் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆளுங்கட்சியான அதிமுக தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் அதிமுகவின் தோல்விக்கு, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. 

அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பின்னர் ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளாராக களமிறங்கி, டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

அதன்பின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கிய அவர் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் களம் கண்டார்.

அதில் அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது.

இதனால் அக்கட்சியில் முக்கிய உறுப்பினர்களாக இருந்த செந்தில் பாலாஜி, தங்க.தமிழ்ச்செல்வன், புகழேந்தி என ஒவ்வொருவராக விலகி சென்றதால் அக்கட்சியினர் இடையே அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனால் அந்த அமைப்புக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்றும்; உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிட வேட்பாளர்கள் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கினர்.

எனினும் அதனை பொருட்படுத்தாமல் அந்த அமைப்பை கட்சியாக டிடிவி தினகரன், பதிவு செய்தார்.

இதையடுத்து அக்கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்கியது.

பொதுசின்னம் இன்றி தனித்து போட்டியிட்ட அமமுக இந்த தேர்தலிலும் படுதோல்வியை தழுவும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலரில் 90-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி அனைத்து அரசியல் கட்சியினரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதேபோல் அமமுக கைப்பற்றிய பெரும்பாலான ஒன்றிய கவுன்சிலர் இடங்கள் அதிமுக செல்வாக்கு மிகுந்த இடங்கள் என்றும் கூறப்படுகிறது. 

இதனால் கிராமப்புறங்களில் அதிமுகவின் வாக்கு சதவீதம், அமமுகவால் சரிந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தலில் கடும் சறுக்கலை சந்தித்த அமமுக தற்போது கணிசமான இடங்களில் வெற்றிகளை குவித்துள்ளது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே