அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றிய பிறகே உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மாநிலத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு தாக்கல் செய்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் இந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் தொகுதி மறுவரையறை ஆணைய சட்டத்தின்படி, அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை என தெரிவித்துள்ள மாநில தேர்தல் ஆணையம், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தனித் தொகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்த வரைவு அறிக்கை மீது 32 மாவட்டங்களிலும் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதாகவும், இந்த கூட்டங்களில் திமுக சார்பில் பிரதிநிதிகளும் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது