கர்நாடகாவில் இடைத்தேர்தல் தொடங்கியது..!

கர்நாடகாவில் காலியாக உள்ள 17 சட்டமன்ற தொகுதிகளில், 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கியது.

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் அங்கு ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து 17 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.

இது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் எனவும், அதே நேரத்தில் தகுதி நீக்கம் செய்த எம்.எல்.ஏ.க்களை போட்டியிட தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் காலியாக உள்ள 17 சட்டமன்ற தொகுதிகளில், இன்று 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஆர்.ஆர்.நகர் மற்றும் மஸ்கி தொகுதி வாக்குப்பதிவு குறித்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

இடைத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

கர்நாடகா சட்டப்பேரவையில் மொத்த பலம் 222ஆக உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 111 இடங்கள் தேவை.

பாஜக இன்னும் 7 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என்பதால், எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி தொடருமா என கேள்வி எழுந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை வரும் 9ம் தேதி நடைபெறும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே