தமிழகம் மற்றும் புதுச்சேரியை உலுக்கி எடுத்து விட்டது நிவர் புயல்.
நேற்று இரவு 11 மணி அளவில் கரையைக் கடந்த இந்த புயல், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புயல் மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
அதோடு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகள் சீற்றத்துடன் காணப்பட்டதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது.
சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதோடு, குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்தது.
அதனால், நேற்று மாலை சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் படிப்படியாக மின் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.
மழை நீர் வடிய வடிய இன்று பிற்பகலுக்குள் சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் இது தொடர்பாக அவசர எண்களை அழைத்து தகவல்களை பெறலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.