தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெறுகிறது. இதற்காக மாவட்டம் தோறும் தலா 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மையம் ஒன்றுக்கு ஒரு பொறுப்பு அதிகாரி உட்பட 25 சுகாதாரப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதற்கான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல் செய்துள்ளார்.

இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் சென்னை வந்திருப்பதால், தமிழகத்தில் இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பணிகளை நேரடியாக மேற்பார்வையிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும்; மாநில குளிர்பதன் கிடங்கு மூலம் ஒன்றரை கோடி தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைக்க முடியும் எனவும் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கடந்த 2-ம் தேதியன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

இந்நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஒத்திகை இன்று நடைபெறுகிறது.

கடந்த முறை 5 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை பணியின் போது சுகாதாரத்துறைக்கு ஏற்பட்ட சவால்கள் குறித்த அறிக்கையை மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தனிடம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று வழங்குவார் எனத் தெரிகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தருமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே