நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில் காலை நிலவரப்படி 3 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் குடிசை வீடுகள் உட்பட 101 வீடுகள் இடிந்து சேதமான விவரம் தெரியவந்துள்ளது.

இந்தச் சேத மதிப்பு மேலும் உயரக்கூடும் எனத் தெரிகிறது.

நேற்று மாலை முதல் இன்று காலை வரை தமிழகம் முழுவதும் 380 மரங்கள் முறிந்து விழுந்ததாகவும் அவை அனைத்தும் போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்ட சாலை சீரமைக்கப்பட்டதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

இதேபோல் விளைபயிர்கள் குறித்த சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.

நிவர் புயல் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய முழு விவரம் இன்னும் அரசுத்தரப்பில் வெளியிடப்படவில்லை.

புயலால் பல மாவட்டங்களில் பெய்த கனமழையால் மழை நீர் சாலைகளில் தேங்கி, குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. மரங்கள் சாய்ந்ததால் சென்னை உட்பட பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு முன்கூட்டியே துண்டிக்கப்பட்ட நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்வர் ஓபிஎஸ்சும், திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், அத்தியாவசிய தேவைகளை இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேத விவரங்கள் வெளியாகியுள்ளது.

அவை கீழ்கண்டவாறு: மனித உயிரிழப்பு 3, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 3, சேதமடைந்த வீடுகள் 101, கால்நடைகள் உயிரிழப்பு 26, சாலைகளில் சேதமடைந்த மரங்களின் எண்ணிக்கை 380, மீட்பு முகாம்களின் எண்ணிக்கை 3,085, தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 2, 27, 317, சாய்ந்த மின்கம்பங்கள் 19, நிரந்தர மருத்துவ முகாம்கள் 921, நடமாடும் மருத்துவக் குழுக்கள் 234, மருத்துவ பயன் பெற்றோர்களின் எண்ணிக்கை 73,491.

தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை விட நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதேவேளையில் புதுச்சேரி மாநிலத்திற்கு இந்த நிவர் புயல் பெரியளவில் சேதத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

இதனிடையே தமிழகம் முழுவதும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்ட 3,085 முகாம்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 317 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே