நிவர் புயல் கரையைக் கடந்து வலுவிழந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி முதல்வர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
இது தொடர்பாக அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் ஏற்படுத்திய தாக்கம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் பேசினேன்.
மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்தேன்.
ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்” எனப் பதிவிட்டனர்.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல், நேற்றிரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது.
புதுச்சேரிக்கு வடக்கே இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது.
புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடந்த நிவர் புயல் வலுவிழந்து வடக்கு மற்றும் வடமேற்காக நகர்ந்து சென்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் வேகம் குறைந்தாலும் அது செல்லும் வழியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை முதல் தீவிர கனமழை பெய்து வருகிறது.
நிவர் புயலால் தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். புதுச்சேரியில் 1000-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
நிவர் புயலால் சென்னையின் புறநகர்ப்பகுதிகள் வெள்ளக்காடானது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மீட்புப் பணிகளில் மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.