#BREAKING – மருத்துவரை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும் : மத்திய அரசு

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் முன்னணி வீரர்களாக களத்தில் இருந்து செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களைத் தாக்கினால் 6 மாதம் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

கரோனா தொற்று காரணமாக மரணமடைந்த நரம்பியல் நிபுணரின் உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்துக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் நேற்று முன்தினம் எடுத்துச் சென்றனர்.

அப்போது, மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால், உடலை வேறு ஒரு மயானத்துக்கு எடுத்துச் செல்ல முற்பட்டபோது, அவரது உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர். 

மருத்துவர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனால், அரசு ஊழியர்களும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல. கரோனா ஒழிப்புப் பணியில் இருக்கும் பல மாநிலங்களில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, எச்சில் துப்புவது போன்ற அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதுகுறித்து இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) கண்டனம் தெரிவித்திருந்தது.

கரோனா ஒழிப்பில் உயிரைத் துச்சமாக மதித்து களத்தில் மக்களுக்காகப் போராடி வரும் மருத்துவர்களை மத்திய அரசும், மாநில அரசுகளும் பாதுகாக்க வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தை தடை செய்வோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்தார்.

இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய மருத்துவக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மருத்துவர்கள் சார்பில், கரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாக்க சட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இன்றும், நாளையும் நடக்க இருந்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு அறிவித்தது.

இந்த சூழலில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”கரோனா வைரஸை எதிர்த்துப் போராடி நாட்டைக் காக்கும் பணியில் மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு எதிராக துரதிர்ஷ்டவசமாக தாக்குதல்களும், சீண்டல்களும், அவதூறுகளும் நடக்கின்றன.

மருத்துவர்களுக்கு எதிராக இதுபோன்ற சம்பவங்களை மத்திய அரசு பொறுத்துக்கொள்ளாது.

மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும், தூய்மைப் பணியாளர்களையும் காக்கும் பொருட்டு அவசரச் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விரைவில் அவசரச் சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த அவசரச் சட்டத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

தொற்றுநோய் சட்டம் 1897-ல் திருத்தம் கொண்டுவந்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும். இதற்கான விசாரணை 30 நாட்களில் முடிக்கப்படும்.

இப்போதுள்ள சட்டத்தில் குற்றவாளிகளுக்கு 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரையிலும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையிரும் அபராதம் விதிக்கலாம்.

ஆனால், அவசரச் சட்டத்தில் இது திருத்தப்படும்

மேலும், மருத்துவர்களின் வாகனங்களுக்கோ அல்லது மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கோ பாதிப்பு, தாக்குதல் ஏதும் நடந்தால் இழப்பீடு என்பது சந்தை விலையைக் காட்டிலும் 2 மடங்கு குற்றவாளிகளிடம் இருந்து பெறப்படும்”.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே