நடிகர் ரஜினி கட்சி தொடங்குவாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

1996-ம் ஆண்டு முதல் தான் அரசியலுக்கு வர உள்ளதாக ஒருபோதும் கூறியதில்லை என்றும், டிசம்பர் 2017ல் தான் அரசியலுக்கு வருவேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன் என்றும் கூறினார்.

சிஸ்டம் சரி செய்யாமல், ஆட்சி நடந்தால் நன்றாக இருக்காது என குறிப்பிட்ட ரஜினி, புதியவர்கள், இளைஞர்கள் கட்சிப் பதவிக்கு வருவதில்லை என்றும், அரசியல்வாதிகளின் வாரிசுகள்தான் வருகிறார்கள் எனவும் விமர்சித்தார். அரசியல் வருகையையொட்டி 3 முக்கிய திட்டங்களை ரஜினி முன்வைத்துள்ளார்.

இதில் கட்சியில் தேவையான அளவு மட்டுமே கட்சிப் பதவிகள் வழங்கப்படும் என்றும், 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கட்சிப் பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே தன் திட்டம் என ரஜினி கூறினார்.

கட்சித் தலைவனாக மட்டுமே இருப்பேன் என குறிப்பிட்ட ரஜினி, முதலமைச்சர் பதவியை தன்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை என கூறினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடிகர் வடிவேல் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக நன்மைக்காக சுவாமி தரிசனம் செய்ததாகக் கூறினார்.

கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர் என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேல், தான் முதல்வர் ஆகலாம் என்று நினைத்துள்ளதாகவும் 2021ல் நான் தான் தமிழக முதல்வர் எனவும் நகைச்சுவையுடன் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே