உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த நடவடிக்கை : முதல்வர்

தமிழகத்திலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என, முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

ரூ.5 கோடி செலவில் 25 அரசு தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் எனவும், ரூ.55 கோடி செலவில் 15 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 30 அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இதேபோல் ஆயிரத்து 890 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், மீதமுள்ள பள்ளிகளில் பின்னர் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இயற்கை மற்றும் மனிதர்களால் வனங்களில் நேரிடும் தீ விபத்துகளை தடுத்திடவும், வன விலங்குகள் வனத்தில் இருந்து வெளிவராத வண்ணம் பாதுகாக்கும் பொருட்டு, ரூ.23.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதுடன், சிறப்பு வனக்காவல் பணியமைப்பு மற்றும் தீத்தடுப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் எனவும் அறிவித்தார். 

இதேபோல், யானைகள் காடுகளை விட்டு வெளியேறுவதால் மனித உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் தருமபுரி, திண்டுக்கல்,தேனி மாவட்டங்களில் ரூ.21 கோடி செலவில், எஃகு கம்பிகளுடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே