தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மூன்றாவது நாளாக தமிழகம் முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுவரை 4.43 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது இந்த மாத இறுதிக்குள் 5 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் பேசியுள்ளார். அவர், தற்பொழுது வாரம் தோறும் மத்திய அரசிடம் இருந்து 50 லட்சம் தடுப்பூசிகள் அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு அடுத்த வாரம் 50 லட்சம் தடுப்பூசிகள் வந்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் இதேபோல மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் இதுவரை 500-க்கும் அதிகமான கிராமங்களில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், முதல்வர் தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவ முகாம் மூலம் 11.4 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 5 கோடியை எட்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த இருக்கும் ஒரே வழி; அதனால், தடுப்பூசி போடுங்கள் என அரசு கட்டாயப்படுத்தினாலும் தவறில்லை எனவும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.