2 முறை கொரோனா நெகட்டிவ், மூன்றாவது சோதனையில் பாஸிட்டிவ் – உயிரிழந்தார் உத்தர பிரதேச இன்ஸ்பெக்டர்

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதிபடுத்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னோவ் மாவட்டத்தை சேர்ந்தவர் காவல்துறை ஆய்வாளர் இந்திரஜித் சிங் பட்டாரியா. இவர் கடந்த ஜூலை 23 அன்று மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு காவலர் பயிற்சி பள்ளியில் ஒரு அமர்வில் கலந்து கொண்டுவிட்டு, அவர் தனது பதவியில் இருக்கும் மாவட்டமான ஷாஜாஜ்பூருக்குத் திரும்பியுள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. 

இதனால் அவருக்கு ஜுலை 24 முதல் 31 ஆம் தேதி வரை இரண்டு முறை கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ( அதாவது விரைவான ஆன்டிஜென் சோதனை மற்றும் பிசிஆர் சோதனை ) ஆனால் இதில் கொரோனா தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து அவர் தலைநகர் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும் நோய் பாதிப்பு ஏற்கனவே அதிகரித்திருந்ததால் இந்திரஜித் சிங் பட்டாரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொரோனாவின் ஆரம்ப கட்டத்தில் 2 முறை செய்யப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு அறியப்படாமல், காவல்துறை ஆய்வாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே