9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்றது. 23ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி, 9 மாவட்டங்களில் பெறப்பட்ட 98,151 வேட்பு மனுக்களில் 1,166 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14,571 பேர் வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றனர். 2,981 பணியிடங்களுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

138 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 827 பேரும், 1376 ஒன்றிய குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 6,064 பேரும், 2,779 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கு 10,792 பேரும், 19,705 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 61,750 பேர் போட்டியிடுகிறார்கள். மொத்தமாக 23,998 பதவியிடங்களுக்கு 79,433 பேர் போட்டியிடுகின்றனர்.

இத்துடன் ஏற்கனவே ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த 28 மாவட்டங்களில் விடுபட்ட இடங்களுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு 1,386 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே