துணைநிலை ஆளுநராக இல்லாமல் புதுச்சேரி மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக இருப்பேன் என்று கூறியுள்ளார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டைக் குழந்தைகளை கையாளும் திறன் மருத்துவரான எனக்கு உள்ளது என்று கூறினார்.

புதுச்சேரியில் அரசியல் குழப்பங்களுக்கு இடையே தமிழிசை சவுந்தரராஜன் இன்று துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழில் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றுக் கொண்டார் தமிழிசை சவுந்தராஜன். 

புதுச்சேரி வரலாற்றில் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டது இதுவே முதன் முறையாகும்.

பதவியேற்றபின் தனது அறையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்துப் போட்டு பணிகளை தொடங்கினார். ஏராளமானோர் பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்துக்களை கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், பதவிப்பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு. அந்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது என்று கூறினார்.

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் குறைவாக இருப்பது வேதனையளிக்கிறது என்று கூறிய அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆளுநர் மற்றும் முதல்வரின் அதிகாரம் என்ன என்பது எனக்கு தெரியும். அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவேன். யார் யாருக்கு என்னென்ன அதிகாரம் உள்ளது என்பதை நான் அறிவேன் என்றும் தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் அளித்த புகார் குறித்து ஆலோசித்து சட்டப்படி முடிவெடுப்பேன் என்று கூறினார்.

துணை நிலை ஆளுநரை மக்கள் எளிதில் சந்திக்கக்கூடிய வகையில் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன என்று கூறினார். செய்தியாளர்களுக்கு என் மனதிலும் இடமுண்டு ஆளுநர் மாளிகையிலும் இடமுண்டு என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே